மிகவும் சிரமமான இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கு அண்மைய காலங்களில் குழுக்கள் தற்காப் பிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளன என்றும் ஆனால் இப்போது அந்த நிலையை மாற்ற தமது மான்செஸ்டர் யுனைடெட் குழுவால் முடியும் என்று கூறியுள்ளார் ஹோஸே மொரினியோ. யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகியான சர் அலெக்ஸ் ஃபெர்குசனின் தலைமையில் யுனைடெட் தாக்குதலுக்குப் பெயர் போன குழுவாகத் திகழ்ந்தது. ஆனால் அண்மைய காலமாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லும் குழு தற்காப்பில் கவனம் செலுத்தியே அச்சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று தற்போதைய யுனைடெட் குழு நிர்வாகியான மொரின்யோ கருதுகிறார்.
அதற்குக் கடந்த காற்பந்துப் பருவத்தின் லீக் கிண்ணத்தை வென்று செல்சி குழுவையும் உதாரணமாக அவர் கூறினார். ஆனால் தற்போதைய யுனைடெட் குழுவால் அந்த நிலையை மாற்றி மீண்டும் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். யுனைடெட் தனது முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று மொத்தம் 10 கோல்கள் போட்டுள்ளது. எனினும் தேவை ஏற்படும் போது, குறிப்பாக எதிரணி சவால்மிக்கதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்ற உத்தியுடன் விளையாடுவதே சிறந்தது என்று கூறிய மொரின்யோ, இம்முறை லீக் கிண்ணத்தை வெல்லும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

