லண்டன் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டியை 3-2 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் நேற்று முன்தினம் தோற்கடித்தது. இந்த ஆட்டம் லெஸ்டர் சிட்டியின் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் லிவர்பூலின் சாலா கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
லிவர் பூல் ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் 23 வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி லிவர்பூலின் ஃபிலிப் கோட்டின்யோ அபாரமாக கோல்போட்டார். இடைவேளைக்குச் சில வினாடிகளே எஞ்சியிருந்தபோது லெஸ்டர் °சட்டியின் ஒகாசாகி கோல் போட்டார். இடைவேளையின்போது ஆட்டம் 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூலுக்குச் சாதகமாக இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் ஆட்டத்தைச் சமன் செய்ய லெஸ்டர் போராடியது. ஆனால் 68வது நிமிடத்தில் ஹெண்டர்சன் லிவர்பூலின் மூன்றாவது கோலைப் போட்டார்.

