நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 4=1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. சென்னை, கோல்கத்தா, இந்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூரில் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் பகல்=இரவு ஆட்டமாக நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதலில் பந்தடித்தது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ஓட்டங்களை அது குவித்தது.
243 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 124 ஓட்டங்கள் எடுத்தபோது ரகானே ஆட்டமிழந்தார். அவர் 74 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்திருந்தார். ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 109 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாசி 125 ஓட்டங்களைச் சேர்த்தார். இந்திய அணி 223 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சதம் அடித்த மகிழ்ச்சியை அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி

