மான்செஸ்டர்: ஸ்டோக் காற்பந்துக் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி சொந்த கோல் போட்டாலும் 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்திற்குப் பிறகு பேசிய மேன்சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தான் நிர்வாகி யாக பொறுப்பேற்ற பிறகு, சிட்டி குழுவின் மிகச்சிறந்த ஆட்டம் இது எனப் பாராட்டினார். ஸ்டோக் குழுவிற்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் இரண்டு புள்ளிகள் வித்தியாசத் தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மேன்சிட்டி. சிட்டி குழுவின் இந்த இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கெவின் டி பிரய்ன.
அவர் நேரடியாகக் கோல் எதுவும் போடவில்லை என்றாலும் சிட்டி குழு மூன்று கோல்களைப் புகுத்த உதவியாக இருந்தார். முற்பாதி ஆட்டம் முழுவதும் சிட்டி குழுவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஜீசஸ் முதல் கோலைப் போட, இரண்டாவது கோலைப் போடுவதற்கு கெவின் டி பிரய்ன வின் ஆட்டம் உதவி புரிந்தது. டி பிரய்ன கொடுத்த பந்தை லீராய் சானி லாவகமாக ரஹீம் ஸ்டெர்லிங்கிடம் அனுப்ப அவர் அதைக் கோலாக மாற்றினார்.
ஸ்டோக் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி ஏழு கோல்களைப் போட்டது. அவற்றில் மூன்று கோல்களைப் புகுத்த கெவின் டி பிரய்ன (இடது) உதவியாக இருந்தார். படம்: ஏஎஃப்பி

