லிவர்பூல்: யூரோப்பா லீக் காற்பந்து ஆட்டத்தில் எவர்ட்டன், லியோன் குழுவிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ரோனல்ட் கூமனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. யூரோப்பா லீக்கின் குழு நிலை ஆட்டங்கள் எதிலும் வெற்றி பெறாத எவர்ட்டன் குழு 'இ' பிரிவு பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 69வது நிமிடத்தில் எவர்ட் டனின் ஆஷ்லே வில்லியம்ஸ் போட்ட கோலால் ஆட்டம் சமநிலையில் முடியலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியோன் குழுவின் பெர்ட்ரண்ட் ட்ரோர் 75வது நிமிடத்தில் கோல் போட 2=1 என்ற கோல் கணக்கில் லியோன் வெற்றி பெற்றது. முன்னதாக 6வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோலாக மாற்றியது லியோன் குழு.
இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய கூமன், "முடிவு என்னுடையது அல்ல, நிர்வாகத்தின் முடிவுதான் இறுதியானது. "நான் இந்தப் பதவிக்குத் தகுதியானவன் இல்லை என்று நிர்வாகம் நினைத்தால், அதை அவர்கள் என்னிடம் கூறுவார்கள்," என்றார். இதுதவிர பிரிமியர் லீக் போட்டி களின் கடைசி ஐந்து ஆட்டங்களில் மூன்று தோல்வி, ஒரு சமநிலை என பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது எவர்ட்டன். எனவே அக்குழுவின் நிர்வாகி கூமனின் பதவிக்கு ஆபத்து ஏற் படலாம் என்று கூறப்படும் நிலையில் பேசிய அவர், "இது மிகவும் கடினமான தருணம். வெற்றி ஒன்றுதான் நம்பிக்கை தரும்," என்று கூறினார். இந்நிலையில் நாளை நடைபெற வுள்ள பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் ஆர்சனல் குழுவை எதிர்கொள்கிறது எவர்ட்டன்.
எவர்ட்டன் வீரர் டோமினிக் (வலமிருந்து 2வது) கோல் வலையை நோக்கி தலையால் முட்டி உதைத்த பந்தைத் தடுத்து நிறுத்தும் லியோன் குழுவின் கோல் காப்பாளர் ஆண்டனி லோப்ஸ் (இடது). படம்: ஏஎஃப்பி

