மும்பை: நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டித் தொடரை வெற்றியுடன் தொடங்க வியூகம் வகுத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. எனினும் சொந்த அரங்கு என வரும்போது இந்திய அணியே உலகில் தலைசிறந்த அணியாகத் திகழ்கிறது என நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் கூறியுள்ளார். "சொந்த அரங்கில் விளையாடுவது என வரும்போது இந்திய அணிதான் உலகிலேயே மிகச் சிறந்த அணி," என பாராட்டியுள்ளார் வில்லியம்ஸன். "இந்திய அணியை வெற்றி பெற வழக்கத்து மாறாக எங்கள் அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். இந்திய ஆடுகளங்கள் சிறப்புமிக்கவை, சற்று வித்தியாசமானவை. அந்த ஆடுகளங்களுக்கு ஏற்ப எங்கள் விளையாட்டை அமைத்துக் கொள்வதும் முக்கியம்," என்று அவர் கூறினார்.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது. இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. வீராட் கோஹ்லி தலைமையி லான இந்திய அணி அண்மையில் சொந்த மண்ணில் ஆஸ்தி ரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதேபோல நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளார் அணித் தலைவர் விராட் கோஹ்லி (படம்).

