ஷார்ஜா: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை அணி, அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் படுமோசமாக விளையாடி அவமானப்பட்டது. முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற இலங்கை அணி நேற்று முன்தினம் நடந்த ஐந்தாவது, கடைசி ஆட்டத்திலாவது வென்று ஆறுதலடையும் நம்பிக்கையில் இருந்தது. மாறாக, அந்தப் போட்டியில் இன்னும் மோசமாகச் செயல் பட்டு 5-0 என முற்றிலுமாகத் தொடரைப் பறிகொடுத்தது.
முதலில் பந்தடித்த இலங்கை அணி 26.2 ஓவர்களிலேயே எல்லா விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 103 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் சரிவுக்குக் காரணமாக அமைந்தார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து இலக்கை எட்டி வெற்றியைச் சுவைத்தது. இவ்வாண்டில் இப்படி 5-0 என இலங்கை அணி தொடரை இழந்தது இது 3வது முறை. முன்னதாக தென்னாப்பிரிக்கா, இந்திய அணிகளிடமும் அந்த அணி அப்படித் தோற்றிருந்தது.

