மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் புள்ளிப் பட்டியலில் தரப்புக்கு 20 புள்ளிகளைப் பெற்று இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவும் இன்றிரவு நடக்கவுள்ள முக்கிய ஆட்டத்தில் பொருதுகின்றன. கடந்த வார இறுதியில் நடந்த இபிஎல் போட்டியில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவிடம் 2=1 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த யுனைடெட், வார மத்தியில் நடந்த லீக் கிண்ண ஆட்டத்தில் சுவான்சி சிட்டியை 2=0 என்ற கணக்கில் வென்று வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. மாறாக, வலுவான லிவர்பூல் குழுவை 4=1 என்ற கணக்கில் தோற்கடித்த ஸ்பர்ஸ் குழு, லீக் கிண்ண ஆட்டத்தில் 3=2 என வெஸ்ட் ஹேம் யுனைடெட்டிடம் தோற்று அதிர்ச்சியளித்தது.
சொந்த அரங்கான ஓல்ட் டிராஃபர்டில் இந்தப் பருவத்தில் யுனைடெட் வலுவான குழுவாகத் திகழ் கிறது. இருந்தாலும் அக்குழு ஆடிய கடைசி இரு இபிஎல் ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைய வில்லை. அத்துடன், வார மத்தியில் கிட்டிய லீக் கிண்ணத் தோல்விக்கு முன், தான் ஆடிய கடைசி 11 ஆட்டங்களிலும் ஸ்பர்ஸ் குழு தோற்கவில்லை என்பதும் யுனைடெட்டுக்கு கவலைதரும் அம்சம். ஆகையால், சொந்த அரங்கு சாதகம் இருந்தாலும் யுனைடெட்டைப் பொறுத்தமட்டில் ஸ்பர்சுக்கு எதிரான இன்றைய ஆட்டம் அவ்வளவு எளிதாக இருக்காது. போதாதற்கு, இந்தப் பருவத்தில் எட்டு கோல்களை அடித்து அதிக கோலடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் ஹேரி கேனையும் சமாளித்தாக வேண்டும். இந்த நிலையில், லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத் தில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக கேன் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.
சுவான்சி சிட்டிக்கு எதிரான லீக் கிண்ண ஆட்டத்தின்போது காயமடைந்து வெளியேறிய யுனைடெட் வீரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் முழு உடல் திறனுடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

