மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 1=-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனை டெட் நேற்றிரவு தோற்கடித்தது. இந்த ஆட்டம் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங் கத்தில் நடைபெற்றது. யுனைடெட்டின் வெற்றி கோலை ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் அண்டனி மார்ஷல் போட்டார். ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் அவர் மார்கஸ் ரேஷ்பர்ட்டுக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கினார்.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு குழுக்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மார்கஸ் ரேஷ்பர்ட் அனுப்பிய பந்தை ஸ்பர்ஸ் கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார். யுனைடெட் எவ்வளவு முயன்றும் அதனால் ஸ்பர்ஸ் குழுவின் தற்காப்பு அரணை முறியடிக்க முடியாமல் போனது. இடைவேளையின்போது கோல் ஏதுமின்றி ஆட்டம் சமநிலையில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் அதன் தாக்குதல்களைத் தீவிரப்படுத் தியது.
இருப்பினும், ஸ்பர்ஸ் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் நிதானம் இழக்கவில்லை. இந்நிலையில், ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் யுனைடெட்டின் ரொமேலு லுக்காகு தலையால் முட்டிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஸ்பர்ஸ் குழுவுக்கு அடுத்த இரண்டு நிமிடங்களில் பேரிடி விழுந்தது.
தமக்கு நெருக்கடி தரும் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர்களை ஓரங்கட்டி பந்தை வலை நோக்கி அனுப்பும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ரொமேலு லுக்காகு (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

