பதினேழாவது முறையாகவும் இந்தியாவில் முதல் முறையாகவும் நடந்த U-17 உலகக் கிண்ணப் போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. கிரிக்கெட் பித்துப் பிடித்த இந்தியர்கள் மத்தியில் காற்பந்து மோகமும் அதிகரித்துள்ளது என்பதற்கு போட்டிகளைப் பார்க்க விளையாட்டரங்கங்களுக்குத் திரண்ட பார்வையாளர்களே சான்று. U=17 உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் நடந்த போட்டிகளை 1,347,143 பேர் நேரில் கண்டுகளித்தனர்.
2011ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடந்த U-17 உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண 1,309,929 பேர் வந்திருந்ததே முந்தைய சாதனை. அதுபோல, U=17 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ஆக அதிக கோல்கள் அடிக்கப்பட்டதும் இம்முறைதான். மொத்தம் 52 போட்டிகளில் 177 கோல்கள் போடப்பட்டன. 2013ஆம் ஆண்டு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடந்த U=17 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 172 கோல்கள் அடிக்கப் பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. அதேபோல, கோல் சராசரியைப் பொறுத்த வரையில், பங்கேற்கும் அணிகள் 24ஆக அதிகரிக்கப்பட்டபின் இம்முறைதான் அதிக கோல்கள் அடிக்கப்பட்டன.
ஒரு போட்டிக்குச் சராசரியாக 3.4 என்ற எண்ணிக்கையில் கோல்கள் அடிக்கப்பட்டன. 1997ல் எகிப்திலும் 2003ல் பின்லாந்திலும் நடந்த போட்டிகளில் சராசரியாக ஒரு போட்டிக்கு 3.66 கோல்கள் போடப்பட்டன. ஆயினும், அப்போது மொத்தம் 16 அணிகள் மட்டுமே களத்திலிருந்தன. தொடரை ஏற்று நடத்திய இந்தியா பிரிவுச் சுற்றுடன் வெளியேறியபோதும் பிரதான உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தமது அணி தகுதி பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.2

