பிரபல பாக். கிரிக்கெட் வீரர் ஓய்வு கராச்சி: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பந்தடிப்பாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், 40, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் உலகத் தரவரிசையில் உச்சத்தை எட்டிய அஜ்மல் 2006ஆம் ஆண்டு அனைத்துலக அரங்கில் அடியெடுத்து வைத்தார். அப்போது முதலே விக்கெட் வேட்டையில் ஈடுபட்ட அஜ்மல் பந்தை எறிவதாகப் புகார் எழுந்தது.
அவரது பந்துவீசும் பாணியைச் சோதித்த அனைத்துலக கிரிக்கெட் மன்றம் 2014ஆம் ஆண்டு அவருக்குத் தடை விதித்தது. இருந்தாலும், தமது பந்துவீச்சு பாணியை மாற்றிக்கொண்டு மீண்டும் அனைத்துலகப் போட்டிகளில் களம் இறங்கினார் அஜ்மல். ஆனாலும், முன்னைப் போல் அவரால் சோபிக்க முடியாததால் பாகிஸ்தான் அணியில் இருந்தே ஓரங்கட்டப்பட்டார். மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், அதில் பத்து முறை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோரை ஆட்டமிழக்கச் செய்தார். அத்துடன் 113 ஒருநாள் போட்டி களில் 184 விக்கெட்டுகளையும் 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். எதிர்காலத்தில் பயிற்றுவிப்பாளராக விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

