மிலான்: நான்கு முறை கிண்ணம் வென்றிருக்கும் இத்தாலி அணி ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் விளை யாடத் தகுதி பெறாமல் பெரும் தலைக்குனிவைச் சந்தித்துள்ளது. 'பிளே ஆஃப்' சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவீடன் 1=0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற் றது.
இதனால் குறைந்தது இரு கோல்கள் வித்தியாசத்தில் வென் றால்தான் இறுதிச் சுற்றுப் போட்டி களுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் நேற்று அதிகாலையில் சொந்த மண்ணில் நடந்த இரண்டாவது 'பிளே ஆஃப்' ஆட்டத்தில் சுவீடனுடன் இத்தாலி மோதியது. ஆட்டத்தின் முக்கால்வாசி நேரம் இத்தாலிய வீரர்கள் வசமே பந்து இருந்தபோதும் அவர்களால் ஒரு கோல்கூட அடிக்க முடிய வில்லை. ஒன்று, அவர்களின் கோல் முயற்சிகளை சுவீடன் கோல் காப்பாளர் ஓல்சன் முறியடித்தார்; இல்லையேல், பந்து வலைக்குள் புகாமல் வெளியே சென்றது. அதேபோல சுவீடன் வீரர்களா லும் கோலடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 எனச் சமனில் முடிய, முதல் ஆட்டத்தில் வென்றிருந்த சுவீடன் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.

