சிங்கப்பூர் குழு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை சிங்கப்பூர் இழந்தது. தேசிய விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் பஹ்ரேனிடம் 3=0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டதன் மூலம் சிங்கப்பூரின் ஆசியக் கிண்ணக் கனவு கலைந்தது. தகுதிச் சுற்றில் 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டம் 0=0 எனச் சமநிலையில் முடிந்தது குறிப்பிடத் தக்கது. துர்க்மெனிஸ்தான், தைவான் ஆகியவை இந்தப் பிரிவில் உள்ள மற்ற இரு அணிகள். பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த பஹ்ரேனும் துர்க்மெனிஸ் தானும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சிங்கப்பூர் குழு அவற்றில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கு ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில் நேற்றிரவு மியன்மாருடன் பொருத இருந்தது.
ஆசியக் கிண்ணம்: வாய்ப்பை இழந்தது
1 mins read

