கோல்கத்தா: இந்திய, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடை யிலான முதல் டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 'டிரா'வில் முடிந்தது. இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடை யிலான முதல் டெஸ்ட் கடந்த 16ஆம் தேதி கோல்கத்தா ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் தொடங்கியது. மழை காரணமாக முதல் இரண்டு நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி தடைபட்டது. முதல் இன்னிங்சில் இந்தியா தட்டுத் தடுமாறி 172 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த இலங்கை அணி, ரங்கனா ஹெராத் கடைசி நேரத்தில் சற்றுத் தாக்குப் பிடிக்க, முதல் இன்னிங்சில் 294 ஓட்டங்களை எடுத்தது. 122 ஓட்டங்கள் பின்னிலையுடன் 2வது இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா, இம்முறை இலங்கை வீரர்களின் பந்துகளைத் திறம்பட எதிர்கொண்டு ஓட்டம் சேர்த்தது. அந்த அணி எட்டு விக்கெட்டு களை இழந்து 352 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து, 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இலங்கை அணி மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்த அணி ஏழு விக்கெட் இழப் பிற்கு 75 ஓட்டங்களை எடுத்து இருந்தபோது, வெளிச்சமின்மை யால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கைக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சதமடித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. இது அனைத்துலக அளவில் இவருக்கு 50வது சதம். படம்: ஏஎஃப்பி

