மேலும் 5 ரஷ்ய ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்நாள் தடை

மேலும் 5 ரஷ்ய ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்நாள் தடை

1 mins read

பெர்லின்: கடந்த 2014ஆம் ஆண்டு சொச்சி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மேலும் 5 ர‌ஷிய வீரர்கள் ஊக்கு மருந்து உட்கொண்ட குற்றத்திற்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு வாழ்நாள் தடை பெற்றனர். ரஷ்யாவின் சொச்சியில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பல ரஷ்ய வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டு பங்கு பெற்றது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊக்க மருந்து உட்கொண்ட 14 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவர்களது பதக்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது மேலும் ஐந்து வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பாப்செல்ய் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இருவரும், 'பயெத்லான்' போட்டியில் வெள்ளிப்பதக்கங்கள் வென்ற இருவரும் அடங்குவர். அவர்களுக்கு அனைத்துலக ஒலிம்பிக் குழு வாழ்நாள் தடை விதித்து அவர்களது பதக் கங்களையும் பறிமுதல் செய்தது. இதனுடன் சொச்சி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மொத்தம் 19 ரஷ்ய வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டதற்காக வாழ்நாள் தடை பெற்றுள்ளனர்.