லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சுவான்சி யுடன் அது மோதியது. இதில் 4=0 எனும் கோ-ல் கணக்கில் சிட்டி அபார வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிட்டி தாக்குதலில் ஈடுபட்டது. ஆதிக்கம் செலுத்திய சிட்டிக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் சுவான்சி திணறியது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் டேவிட் சில்வா கோல் போட்டு சிட்டியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். சிட்டிக்காக தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் அவர் கோல் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏழு நிமிடங்கள் கழித்து, டி பிரய்ன சிட்டியின் நிலையை மேலும் வலுவாக்கினார். அவர் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இடைவேளையின்போது சிட்டி 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஏழு நிமிடங்களில் சில்வா மீண்டும் கோல் போட்டார். ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது செர்ஜியோ அகுவேரோ சிட்டியின் நான்காவது கோலைப் போட்டு சுவான்சியின் கதையை முடித்து வைத்தார்.
சிட்டியின் மூன்றாவது கோலைப் போடும் டேவிட் சில்வா (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

