பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந் துக்கும் இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா மூன்று விக் கெட்டுகள் இழந்து 203 ஓட்டங்கள் எடுத்து 200 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் 2=0 என்று முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வின் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (படம்) 92 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்னும் எட்டு ஓட்டங்கள் எடுத்தால் அவர் சதம் தொடுவார். இங்கிலாந்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 403 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி ஆறு விக்கெட்டுகளை அது வெறும் 35 ஓட்டங்கள் எடுத்து இழந்தது.
இங்கிலாந்தின் டேவிட் மலான் 140 ஓட்டங்களைச் சேர்த்தார். ஜானி பேர்ஸ்டோ 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து, ஆஸ்திரேலியா பந்தடிக்கத் தொடங்கியது. அதன் முதல் இரண்டு விக்கெட்டுகளை கிரேக் ஓவர்டன் கைப்பற்றினார். தொடக்கத்தில் தடுமாற்றம் கண்ட போதிலும் துவண்டுவிடாமல் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்குக் கைமேல் பலன் கிட்டியது. ஆஸ்திரேலியாவின் உஸ்மான் குவாஜா சிறப்பாகப் பந்தடித்து அரை சதம் எட்டினார். அவர் 50 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பேன்கிரோவ், வார்னர் ஆகியோர் முறையே 25, 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், நிதானத்துடன் பந்தடித்த ஸ்மித் ஆஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

