லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் இரு முன்னணி குழுக்கள் நேற்று முன்தினம் பின்னிரவு பொருதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தபோதும் அந்த ஆட்டம் காற்பந்து ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. ஆர்சனல் குழுவின் சொந்த அரங்கில் அதை எதிர்கொண்டது செல்சி குழு. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலிருந்தே இரு குழுக் களும் சரமாரியாக தாக்குதல் களை முடுக்கிவிட்டன.
ஆர்சனல் ஒரு முனையில் கோல் முயற்சிகளில் ஈடுபட்டால் உடனே மறு நொடி, மறுமுனையில் செல்சி கோல் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் முதல் பாதியின் 'ஹீரோக்கள்' இரு குழுக்களின் கோல்காப்பாளர் கள்தாம். ஆர்சனல் குழுவின் கோல்காப்பாளர் பெட்டர் செக் செல்சி ஆட்டக்காரர்களின் கோல் முயற்சிகளை ஒரு முனையில் தடுத்து நிறுத்தினார். மறு முனையில் செல்சி குழுவின் கோல் எல்லையில் இரும்புச் சுவர் போல கோல்காப்பாளர் திபோ கோர்டுவா ஆர்சனல் குழுவின் கோல் முயற்சிகளைத் தடுத்தார். முதல் பாதி கோல் ஏதுமின்று சமநிலையில் முடிவதற்கு இரு கோல்காப்பாளர்களே காரணம்.
ஆர்சனல் குழுவும் செல்சி குழுவும் பொருதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஆர்சனல் குழுவின் பெல்லரின் (வலது) உதைத்த பந்து லாவகமாக செல்சி கோல்காப்பாளர் கோர்டுவாவைக் கடந்து வலைக்குள் புகுந்தது. இதுவே ஆட்டத்தைச் சமன் செய்த இறுதி கோலாகவும் அமைந்தது. படம்: ஏஎஃப்பி

