மெல்பர்ன்: இவ்வாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியப் பொது விருதில் உலகின் 2ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நான்காம் சுற்று ஆட்டத்தில் ஃபெடரர் 6=4, 7=6, 6=2 என்ற நேர் செட்களில் ஹங்கேரி வீரர் மார்ட்டன் ஃபக்சோவிக்ஸைத் தோற்கடித்தார். காலிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 20ஆம் இடத்தில் இருக்கும் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்த்தாட உள்ளார் ஃபெடரர்.
மற்றொரு காலிறுதியில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபாயல் நடாலும் குரோவேஷியாவின் மரின் சிலிச் சும் மோதவுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் முதல் இரு இடங்களிலுள்ள ருமேனி யாவின் சிமோனா ஹாலெப்பும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா அல்லது பார்பரா ஸ்ட்ரைகோவா ஆகிய இருவரில் ஒருவரை ஹாலெப் காலிறுதியில் எதிர்கொள்வார்.
இன்னொரு காலிறுதி ஆட் டத்தில் வோஸ்னியாக்கியும் ஸ்பெயினின் கார்லோ சுவாரெஸ் நவாரோவும் பலப்பரிட்சை நடத்த உள்ளனர். இதற்கிடையே, இரட்டையர் பிரிவில் பிரான்சின் எட்வர்ட் ரோஜர் வேசலினுடன் இணைந்து களமிறங்கிய இந்திய வீரர் ரோகன் போபண்ணா மூன்றாம் சுற்றில் தோற்று வெளியேறினார்.

