முதல் ஆட்டத்திலேயே அசத்திய சான்செஸ்

முதல் ஆட்டத்திலேயே அசத்திய சான்செஸ்

1 mins read
4f05c651-42b1-4e66-92eb-19f918c80e55
-

லண்டன்: ஆர்சனலிலிருந்து விலகி மான் செஸ்டர் யுனைடெட்டில் இணைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அக்குழுவுக்காக முதல்முறையாக நேற்று களமிறங்கினார் அலெக்சிஸ் சான்செஸ். முதல் ஆட்டத்திலேயே தாம் யார், தமது தரம் என்ன என்பதை உணர்த்தும் வகையில் சான்செஸ் சக்கைப்போடு போட்டு முத்திரை பதித்துள்ளார். சிறப்பாக விளையாடிய சான்செஸ், யுனைடெட்டின் அபார வெற்றிக்கு வித்திட்டார். எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டத்தில் நான்காவது நிலை லீக்கில் விளையாடி வரும் யோவில் குழுவை யுனைடெட் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் கோல் மழை பொழிந்த யுனைடெட் யோவிலை 4-0 எனும் கோல் கணக்கில் பிழிந்தெடுத்தது. யுனைடெட்டின் முதல் இரண்டு கோல்களை சான்செஸ்தான் உருவாக்கித் தந்தார். அவர் உருவாக்கித் தந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மார்கஸ் ரேஷ்ஃபர்ட்டும் என்டர் ஹெரேராவும் கோல் போட்டனர். ஆட்டம் முடியும் கட்டத்தில் ஜெசி லிங்கார்ட்டும் ரொமேலு லுக்காகுவும் தலா ஒரு கோல் போட்டு யோவிலின் கதையை முடித்து வைத்தனர். "அலெக்சிஸ் சான்செஸ் ஒரு சிறந்த வீரர். அவர் யுனைடெட்டில் இணைந்திருப்பது அனை வரையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. உயர்தர ஆட்டக்காரர்கள் அவர்களைப் போன்ற நல்ல வீரர்களையே விரும்புவர்.

அலெக்சிஸ் சான்செஸின் மின்னல் வேக ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் யோவில் வீரர்கள் திக்குமுக்காடினர். படம்: ராய்ட்டர்ஸ்