லிவர்பூல்: எஃப்ஏ கிண்ணக் காற் பந்து நான்காம் சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் புரோம்விச் ஆல்பியன் குழுவிடம் 3=2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் குழு அதிர்ச்சித் தோல்வியடைந்தது. சொந்த ஆன்ஃபீல்ட் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் ஐந்தாம் நிமிடத்திலேயே கோலடித்து லிவர்பூலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் பிரேசில் ஆட்டக்காரர் ஃபிர்மினோ. ஆனால், அடுத்த ஆறு நிமிடங்களுக்குள் நிலைமை தலைகீழாக மாறியது.
7வது, 11வது நிமிடங்களில் ஜே ரோட்ரி கெஸ் இரு கோல்களை அடிக்க, ஆட்டம் வெஸ்ட் புரோம் பக்கம் திரும்பியது. போதாக்குறைக்கு, முற்பாதியின் இறுதித் தருணத்தில் லிவர்பூல் வீரர் ஜோயல் மட்டிப் சொந்த கோலடிக்க, 3=1 என்ற முன்னிலையுடன் வெஸ்ட் புரோம் இடைவேளைக்குச் சென்றது. ஆட்டத்தின் 78வது நிமிடத் தில் லிவர்பூலின் முகம்மது சாலா தன் பங்குக்கு ஒரு கோலை அடிக்க, கோல் வித்தியாசம் ஒன்றாகக் குறைந்தது. அதன்பின் லிவர்பூல் குழுவினரால் மேலும் ஒரு கோலை அடிக்க முடியாததால் வெற்றி வெஸ்ட் புரோம் வசமானது.

