ஸ்பர்ஸ் குழுவை வீழ்த்த தயாராகும் யுனைடெட்

ஸ்பர்ஸ் குழுவை வீழ்த்த தயாராகும் யுனைடெட்

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஸ்பர்ஸ் குழுவும் மான்செஸ்டர் யுனைடெட்டும் நாளை அதிகாலை மோதுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் யோவில் குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் பந்தாடியது. இதையடுத்து, ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிராக வெற்றியைச் சுவைக்க யுனைடெட் முனைப்புடன் உள்ளது. யோவிலுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனலிலிருந்து வந்த நட்சத்திர வீரர் அலெக்சிஸ் சான்செஸ் யுனைடெட்டுக்கு முதல் முறையாகக் களமிறங்கினார். அந்த ஆட்டத்தில் யுனை டெட்டுக்காக இரண்டு கோல்களை உருவாக்கித் தந்தார். ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிராக இதைவிட சிறப்பாக விளையாட அவர் இலக்கு கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மான்செஸ்டர் சிட்டியை விட யுனைடெட் 12 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. எனவே, சிட்டிக்கும் தனக்கும் உள்ள புள்ளி இடைவெளியைக் குறைக்க இனி வரும் ஆட்டங் களில் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று யுனைடெட் நன்கு அறிந்திருக்கும். அதே சமயத்தில் சொந்த விளையாட்டரங்கத்தில் விளையாடும் ஸ்பர்ஸ் குழுவும் வெற்றிக்கு அடிபோடுகிறது.

அடுத்த பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற அது போராடி வருகிறது.