புதுடெல்லி: இந்தியப் பொது விருது பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்களை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும் ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரலெசும் மோதினர்.
இப்போட்டியின் முதல் சுற்றைச் சிந்து 21-12 என எளிதாகக் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஸ்பெயின் வீராங்கனை 21-19 எனக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சிந்து அந்த செட்டையும் 21-11 எனக் கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 19-21, 21-11 எனும் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும் அமெரிக்காவின் பெய்வான் சாங்கும் மோதினர். இதில் 21-10, 21-13 என நேர் செட்களில் வெற்றி பெற்ற பெய்வான் சாங் அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான காஷ்யப், சீனாவின் பின் கியாவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-16, 21-18 என நேர் செட்களில் சீன வீரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

