மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியும் ரியால் மட்ரிட் அணியும் மோதிய போட்டியில் ரியால் 3=1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. ஆட்டம் தொடங்கி 33வது நிமிடத்தில் முதல் கோலை பிஎஸ்ஜி அணியின் ஏட்ரியன் ராபியோ புகுத்திய நிலையில் முதல்பாதி முடியும் முன்னரே பெனால்டி மூலம் கோல் எண்ணிக்கையை சம நிலைக்குக் கொண்டு வந்தார் கிறிஸ்டியானொ ரொனால்டோ. ரியால் மட்ரிட் அணிக்கு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ரொனால்டோ புகுத்திய 100வது கோல் அது.
இரண்டாம் பாதி ஆட்டம் சுறுசுறுப்பாகத் தொடர்ந்த நிலையில் 83வது நிமிடத்தில் ரொனால்டோவின் இரண்டாவது கோல் ரியால் மட்ரிட் அணி முன்னிலை பெற காரணமாக இருந்தது. அடுத்த மூன்று நிமிடங்களில் ரியால் மட்ரிட் அணியின் மார்செலோ மேலும் ஒரு கோலை புகுத்தி பிஎஸ்ஜி அணியை தோல்வியடைய வைத்தார். மார்ச் மாதம் 6ஆம் தேதி பிஎஸ்ஜி அணியின் சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்திய சுற்றின் இரண்டாவது போட்டியில் பிஎஸ்ஜி அணிக்குப் பெறும் சவாலை ஏற்படுத்தியுள்ளது ரியால் மட்ரிட் அணி.
ஸ்பானிய லீக் போட்டிகளில் தொடர்ந்து உற்சாகமற்ற முடிவுகளைப் பெற்று வந்த ரியால் மட்ரிட் அணி, முன்னணி குழுவான பிஎஸ்ஜி யுடன் மோதி வெற்றி கண்டதால் புத்துணர்வு பெற்றுள்ளது.
ரியால் மட்ரிட் அணியின் ரொனால்டோவும் பிஎஸ்ஜி அணியின் நெய்மாரும் இடைவேளையின்போது ஒன்றாக அரங்கை விட்டுச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி

