லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு செல்சி தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது நிலை லீக்கில் விளையாடும் ஹல் சிட்டிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் செல்சி கோல் மழை பொழிந்தது. இந்த ஆட்டத்தில் 4=0 எனும் கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. நான்கு கோல்களும் இடை வேளைக்கு முன்பாகப் போடப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியன் இரண்டு கோல் களும் ஒலிவியர் ஜிரூவும் பெட்ரோவும் தலா ஒரு கோலும் போட்டு ஹல் சிட்டியின் கதையை முடித்து வைத்தனர்.
ஆர்சனலிலிருந்து செல்சியில் இணைந்த பிறகு இதுவே ஜிரூ போட்ட முதல் கோலாகும். மற்றோர் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டியும் ஷெஃபீல்ட் வெனஸ் டேயும் மோதின. இந்த ஆட்டத் தைக் கைப்பற்ற லெஸ்டர் சிட்டி கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. இறுதியில் 1=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று லெஸ்டர் சிட்டி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. லெஸ்டரின் வெற்றி கோலை ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஜேமி வார்டி போட்டார்.

