லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு மான்செஸ்டர் யுனைடெட் தகுதி பெற்றுள்ளது. ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் 2=0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வாகை சூடியது. யுனைடெட்டின் இரண்டு கோல் களையும் அதன் நட்சத்திர வீரர் ரொமேலு லுக்காகு போட்டார். ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களிலேயே லுக்காகு அனுப்பிய பந்து வலையைப் பதம் பார்த்தது. ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பின்னடைவு ஹடர்ஸ்ஃபீல்ட் வீரர்களை வெகுவாகப் பாதித்தது. அதிலிருந்து அவர்களால் இறுதிவரை மீண்டு வர முடியாமல் போனது.
இடைவேளைக்கு முன்பாக யுனைடெட்டின் ஜுவான் மாட்டா அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. ஆனால் காணொளி மதிப்பீட்டு முறையின் வழியாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. மாட்டா 'ஆஃப் சைட்' நிலையில் இருந்ததாக முடிவெடுக்கப்பட்டது. இடைவேளையின்போது யுனைடெட் 1=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்திலும் யுனை டெட்டின் ஆதிக்கம் தொடர்ந்தது. அதனுடைய அதிரடி தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஹடர்ஸ்ஃபீல்ட் வீரர்கள் திக்குமுக்காடினர். இந்நிலையில், ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் லுக்காகு மீண்டும் கோல் போட்டார். லுக்காகு இதுவரை யுனை டெட்டுக்காகப் பத்து எஃப்ஏ கிண்ண ஆட்டங்களில் களமிறங்கியுள்ளார். அவற்றில் அவர் 11 கோல்களைப் போட்டுள்ளார்.
இரண்டாவது கோலைப் போட்டு ஏஷ்லி யங்குடன் கொண்டாடும் லுக்காகு (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

