ரசிகர்கள் மோதலில் போலிஸ் அதிகாரி மரணம்

ரசிகர்கள் மோதலில் போலிஸ் அதிகாரி மரணம்

1 mins read
Google News Preferred Icon

மட்ரிட்: ஸ்பெயினின் பில்பாவ் நகரில் நேற்று முன்தினம் இரவு அத்லெட்டிக் பில்பாவ்=ஸ்பர்ட்டக் மாஸ்கோ குழுக்களின் ரசிகர்கள் மோதிக் கொண்டதைத் தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சான் மேம்ஸ் விளையாட்டு அரங்கிற்கு வெளியே போட்டி நடப்பதற்குமுன் இரு குழுக்களின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது அந்த போலிஸ் அதிகாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. மோதலில் ஈடுபட்டதற்காகக் குறைந்தது ஐந்து பேரை போலிஸ் கைது செய்துள்ளது. அத்லெட்டிக் பில்பாவ் குழு உடனான நான்காம் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ குழு வெற்றி பெற்றது. ஆனாலும் சொந்த அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் 3-1 என அக்குழு தோற்று இருந்ததால், ஒட்டு மொத்த கோல் கணக்கில் 4=3 எனப் பின்தங்கியது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அக்குழு இழந்தது. இவ்வாண்டு ரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க கடும் பாதுகாப்பு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.