மான்செஸ்டர்: செல்சியின் நிர்வாகி யான அண்டோனியோ கோன்டே ஒரு காற்பந்து சாணக்கியன் என்று மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா வர்ணித்து உள்ளார். இங்கிலிஷ் காற்பந்தில் கோன்டே கண்டிப்பாக முத்திரை பதிப்பார் என்றும் அவர் ஏற்படுத்தும் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்றும் கார்டியோலா அடித்துக் கூறுகிறார். செல்சியின் நிர்வாகியாக கோன்டே 2016ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அவர் வந்த வேகத்திலேயே 2016=2017 பருவத்தில் செல்சி இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியை வென்றது. 5=3=2 எனும் அணி வியூகத்தை இத்தாலியரான கோன்டே கையாண்டு செல்சியை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றார்.
இந்தப் பருவத்தில் செல்சி லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அடுத்த பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கு அது இன்னும் தகுதி பெறவில்லை. தகுதி பெற அது கடுமையாகப் போராடி வருகிறது. இருப்பினும், கோன்டேவுக்கு கார்டியோலா புகழாரம் சூட்டி உள்ளார். "லீக் போட்டியில் அவர் செய்திருக்கும் பல சிறப்பான விஷயங்கள் பற்றி பலருக்குத் தெரியவில்லை. இங்கிலிஷ் காற்பந்து இதுவரை கண்டிராத இன்னோர் உத்தியை அவர் அறிமுகப்படுத்தி உள்ளார். "ஐந்து தற்காப்பு ஆட்டக்காரர் கள் வியூகத்தைப் பயன்படுத்தி செவ்வனே தாக்குதல் நடத்தும் முறையை அவர் அறிமுகம் செய்துள்ளார்.
செல்சியின் நிர்வாகியான அண்டோனியோ கோன்டேயின் (வலது). ஏஎஃப்பி

