புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களைப் பொறுத்தவரை, அவ்வப்போது சிகை அலங்காரத்தை மாற்றிக்கொண்டு, வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுவது புதிய விஷயமல்ல. முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி பலமுறை இப்படிச் செய்துள்ளார். அந்த வகையில், இப்போதைய அணித்தலைவர் விராத் கோஹ்லி மாறுபட்ட சிகையலங்காரத்துடன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள பதினோராவது இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டிகளில் களமிறங்கக் காத்திருக்கிறார். கோஹ்லியின் இந்தப் புதிய அவதாரத்திற்கு பிரபல சிகை அலங்கார நிபுணர் ஹக்கிம் ஆலிமே காரணம். அவருடன் இருந்தபடி, புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தைத் தமது இன்ஸ்டகிராம், டுவிட்டர் பக்கங் களில் பதிவேற்றம் செய்துள்ளார் கோஹ்லி.
2008ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதலே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரு கிறார் கோஹ்லி. ஆனாலும், அந்த அணி ஒருமுறைகூட இன்னும் பட்டம் வென்றதில்லை. இம்முறை அந்த ஏக்கத்தைப் போக்கி, ஐபிஎல் கிண்ணத்தை உயர்த்தவேண்டும் என்பதில் கோஹ்லி உறுதியாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை 149 போட்டிகளில் ஆடியிருக்கும் இவர், நான்கு சதம், 30 அரை சதம் உட்பட 4,418 ஓட்டங்களை எடுத்துள்ளார். அந்நான்கு சதங் களையும் ஒரே பருவத்தில் (2016) அடித்தது குறிப்பிடத்தக்கது.
சிலை அலங்கார நிபுணர் ஹக்கிம் ஆலிமின் கைவண்ணத்தில் உருமாறியிருக்கும் விராத் கோஹ்லி. படம்: டுவிட்டர்

