ஊதியம் முழுவதையும் நன்கொடையாக அளித்த சச்சின்

1 mins read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிக் காலத்தின் போது பெற்ற ஊதியத்தையும் சலுகைத் தொகைகளையும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி விட்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் சச்சினுக்கு எம்.பி. ஊதியம், சலுகைத் தொகை என கிட்டத்தட்ட 90 லட்ச ரூபாய் (S$181,270) அளிக்கப்பட்டது. சச்சினின் இந்தச் செயலை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். "சச்சின் டெண்டுல்கரின் இந்த நற்செயலுக்கு பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறார். துயரத்தில் உள்ளோருக்குக் கைகொடுப்பது அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும்," என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சச்சின், அதன்பின் நாடாளு மன்றத்தில் நடந்த கிட்டத்தட்ட 400 அமர்வுகளில் 29ல் மட்டுமே கலந்துகொண்டுள் ளார். அப்போது 29 கேள்வி களையும் கேட்டுள்ளார். அதோடு, எம்.பி.க்கான ஊரக மேம்பாட்டு நிதியையும் நல்ல செயல்களுக்காக அவர் செலவிட்டுள்ளார். கல்விப் பணிகளுக்காக, பள்ளிக்கூடங்களில் கட்டடம் கட்ட, வகுப்பறைகளைப் புதுப்பிக்க என்று தமக்கு வழங்கப்பட்ட ரூ.30 கோடியில் ரூ.7.4 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். நாடு முழுவதும் 185 நலத்திட்டப் பணிகளுக்கு சச்சின் நிதியுதவி அளித்து இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.