கோல்கத்தா: பந்தடிப்பு, பந்துவீச்சு என இரண்டிலும் பட்டையைக் கிளப்பிய கோல்கத்தா அணி, டெல்லி அணியைப் பந்தாடியது. 20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று முன்தினம் கோல்கத்தா, டெல்லி அணிகள் மோதின. முதலில் பந்தடித்த கோல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் குவித்தது. ஆந்த்ரே ரசல் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 41 ஓட் டங்கள் எடுத்தார். நிதிஷ் ராணா 59 ஓட்டங்கள் எடுத்தார்.
201 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆடிய டெல்லி அணி முதல் 3 விக் கெட்டை 3 ஓவர்களில் இழந்தது. மீதமிருந்த 7 விக்கெட்டுகளும் 14 ஓவர்களிலேயே பெவிலியன் திரும்ப 129 ஓட்டங்களுக்குச் சுருண்டது டெல்லி. சுனில் நரேனின் பந்துவீச்சும் ரஸலின் பந்தடிப்பும் கோல்கத்தா அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
தோல்வி குறித்து டெல்லி அணித் தலைவர் கௌதம் காம்பீர், "ஒரு கட்டத்தில் கோல்கத்தா அணி 175 ஓட்டங்கள் கூட எடுக் காது என்று நினைத்து இருந்தேன். ஆந்த்ரே ரஸலின் அதிரடியால் தோற்றோம். கையில் இருந்த வெற்றியைக் கோல்கத்தாவிடம் பறிகொடுத்துவிட்டோம்," என்றார்.
டெல்லி அணியின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கோல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் பந்துவீச்சாளர் சுனில் நரேன். இதனால் ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார் இந்த வெஸ்ட் இண்டீஸ் விளையாட்டாளர். படம்: ஏஎஃப்பி

