சண்டிகர்: அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் சதம் விளாச, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ஓட் டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது. பதினோராவது ஐபிஎல் டி20 தொடரில் முதல் சதம் அடித்த பெருமை யைப் பெற்றார் கெய்ல். ஒட்டுமொத்த மாக, ஐபிஎல் போட்டிகளில் இவருக்கு இது ஆறாவது சதம். பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த பஞ்சாப் அணிக்கு நிதானத் தொடக்கம் தந்தது ராகுல்-கெய்ல் இணை. ராகுலும் அடுத்து வந்த மாயங்க் அகர்வாலும் ஆளுக்கு 18 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
நான்காவது வீரராக கருண் நாயர் திடலுக்குள் வந்தபின் கெய்ல் தமது வழக்கமான அதிரடி பாணிக்கு மாறி னார். குறிப்பாக, கஞ்சத்தனமாகப் பந்து வீசி, விக்கெட்டுகளை வீழ்த்து வதில் வல்லவரான ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், கெய்லின் அதிரடியால் மிரண்டுபோனார். ரஷித் கான் வீசிய இன்னிங்சின் 14வது ஓவரில் அடுத்தடுத்து நான்கு சிக்சர்களை விளாசிய கெய்ல், 63 பந்துகளில் ஒரு பவுண்டரி, பதினொரு சிக்சர்களுடன் 104 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை களத்தில் நின்றார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 193 ஓட்டங்களை எடுக்க முடிந்தது.
அடுத்து பந்தடித்த ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவான், தாம் எதிர் கொண்ட முதல் பந்திலேயே விரலில் காயமடைந்து ஓய்வறை திரும்பினார். அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (54), மணிஷ் பாண்டே (57*) என இருவர் அரை சதம் விளாசியபோதும் அது ஹைதராபாத் அணியின் வெற்றிக் குப் போதுமானதாக இல்லை. அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் அந்தக் குழுவிற்குக் கிட்டிய முதல் தோல்வி இதுதான்.
ஆட்ட நாயகனாகத் தேர்வுபெற்ற கெய்ல், "வீரேந்தர் சேவாக் என்னை ஏலத்தில் எடுத்ததன்மூலம் ஐபிஎல் தொடரைக் காப்பாற்றிவிட்டார்," என்று வேடிக்கையாகச் சொன்னார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் பதினொரு சிக்சர்களுடன் சதம் விளாசிய கிறிஸ் கெய்ல். படம்: ஏஎஃப்பி

