பர்ன்லி: அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக் காற்பந்துக்குத் தகுதிபெறும் வாய்ப்பு மிகக் குறைந்த அளவே இருந்த போதும் அதை இன்னும் இழந்து விடாமல் பற்றிக்கொண்டுள்ளது செல்சி காற்பந்துக் குழு. நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் செல்சி 2=1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி குழுவைத் தோற்கடித்தது. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் செல்சி ஆட்டக்காரர் விக்டர் மோசஸ் உதைத்த பந்தை பர்ன்லியின் கெவின் லாங் தடுக்க முற்பட, அது அவரது காலில் பட்டு வலைக்குள் புகுந்து சொந்த கோலானது. பின் 69வது நிமிடத்தில் தாமே ஒரு கோலடித்து, செல்சியின் வெற்றியை உறுதிசெய்தார் மோசஸ்.
இந்த வெற்றியின்மூலம் ஐந்தாம் இடத்தில் உள்ள செல்சிக்கும் நான்காம் இடத்தில் உள்ள ஸ்பர்சுக்கும் இடை யிலான புள்ளி வித்தியாசம் ஐந்தாகக் குறைந்துள்ளது. இன்னும் நான்கு ஆட்டங்களே எஞ்சி இருக்கும் நிலையில் ஸ்பர்ஸ் குழு மோசமாக ஆடி, தானும் சிறப்பாக ஆடினால் மட்டுமே செல்சிக்கு சாம்பி யன்ஸ் லீக் வாய்ப்பு உறுதியாகும். இந்த நிலையில், நேற்றைய ஆட்டம் குறித்துக் கருத்துரைத்த செல்சி நிர் வாகி அன்டோனியோ கோன்டே, அக் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர்களான அல்வாரோ மொராட்டாவையும் ஒலி வியர் ஜிரூவையும் வெகுவாக மெச்சி னார். "மொராட்டாவும் ஜிரூவும் மிகச் சிறப்பாக ஆடினர். ஒவ்வொரு முறை தங்களிடம் பந்து வந்தபோதும் எதிர் அணிக்கு அவர்கள் நெருக்கடியை ஏற்படுத்தினர்," என்றார் கோன்டே.
இந்த ஆட்டத்தில் அருமையான ஒரு கோல் வாய்ப்பை அல்வாரோ வீணடித்தபோதும் கோன்டே அவரைப் பாராட்டிப் பேசியது வியப்பளிப்பதாக இருந்தது. நாளை இரவு நடக்கவுள்ள எஃப்ஏ கிண்ண அரையிறுதியில் சௌத்ஹேம் டன் குழுவை எதிர்த்தாடவுள்ள செல்சி, அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் முக்கிய இபிஎல் ஆட்டத்தில் லிவர்பூல் குழுவுடன் மோதவுள்ளது.
செல்சி குழுவின் இரண்டாவது கோலை அடித்த மகிழ்ச்சியை சக வீரர்களான மொராட்டா (இடது), பெட்ரோ (வலது) உடன் சேர்ந்து கொண்டாடும் விக்டர் மோசஸ். படம்: ராய்ட்டர்ஸ்

