லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் 33 போட்டிகளில் விளையாடி 31 கோல்களைப் போட்டு, சிறந்த காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் எகிப்திய ஆட்டக்காரர் முகம்மது சாலா, 25. இப்போது லிவர்பூல் குழுவிற்காக ஆடி வரும் சாலாவை 2014ல் ஒப்பந்தம் செய்தது செல்சி. ஆனாலும் அவர் ஃபியோரென்டினா குழுவிற்குக் கடனாக அனுப்பப்பட்டு, பின்னர் 2016ல் ரோமா குழுவிற்கு விற்கப்பட்டார். இப்போதைய மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியான ஜோசே மொரின்யோதான் அப்போது செல்சியின் நிர்வாகியாக இருந்தார். அதனால், சாலாவை விற்றது மொரின்யோதான் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில், அதனை மறுத்துள்ளார் மொரின்யோ. "சாலாவை விற்றது நான்தான் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதற்கு நேர் எதிரானது. சாலாவை வாங்கும்படி செல்சியிடம் சொன்னது நான்தான். அப்போது அவர் இளம் வீரர். அதனால் அவரைக் கடனாக அனுப்பியது எல்லாரும் கூடிப் பேசி எடுத்த முடிவு. ஆனால், அதன்பின் அவரை விற்றது முழுக்க முழுக்க செல்சியின் முடிவு," என்று மொரின்யோ தெரிவித்துள்ளார்.
