மான்செஸ்டர்: ஆர்சனல் குழு நிர்வாகியாக கடைசி முறையாக ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டு அரங்கில் கால்பதித்த தருணமும் ஆர்சன் வெங்கருக்கு மகிழ்ச்சிகர மானதாக அமையவில்லை. கடைசி நேரத்தில் மருவான் ஃபெலைனி தலையால் முட்டி அடித்த கோலால் மான்செஸ்டர் யுனைடெட் குழு 2=1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் பால் போக்பா கோலடித்து யுனை டெட்டுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாம் பாதியின் ஆறாம் நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக்கொண்டு வந்தார் முன்னாள் யுனைடெட் வீரரும் இந்நாள் ஆர்சனல் ஆட்டக் காரருமான மகிதார்யான். போட்டி தொடங்குமுன் முன் னாள் யுனைடெட் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்குசன், வெங்க ருக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.
ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் தமக்கு எப்போதுமே மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது என வேடிக்கையாகச் சொன்ன வெங்கர், "நீண்டகாலமாக இங்கு வந்து செல்கிறேன். அடுத்த பருவத்தில் வேறு யாரோ ஒருவர் இங்கு வருவார். அப்போது, காற்பந்துப் பகைமைச் சூழல் மீண்டும் பற்றிக் கொள்ளும்," என்றார். ஹைபரி, எமிரேட்ஸ் அரங்கு களுக்கு அடுத்து, ஆர்சனல் நிர் வாகியாக வெங்கர் அதிக முறை தோற்றது ஓல்டு டிராஃபர்ட் அரங் கில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அந்த அரங்கில் விளையாடிய 11 போட்டிகளிலும் வெங்கரின் ஆர்சனல் வென்றதே இல்லை. 2011-12 பருவத்திற்குப் பிறகு இந்தப் பருவத்தில்தான் ஆர்சனலுடன் மோதிய இரு முறையும் யுனைடெட் வென்றிருக் கிறது.

