இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் கடந்த நான்கு ஆட்டங்களில் வாகை சூடிய செல்சி குழு, தரவரிசையில் லிவர்பூல், ஸ்பர்ஸ் குழுக்களைப் பின்னுக்குத் தள்ளி நான்காம் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. இன்று பின்னிரவு நடைபெறும் ஆட்டத்தில் அது ஹடர்ஸ்ஃபீல்டு குழுவை வெற்றி கொண்டு, அதே சமயம் பிரைட்டனுடனான ஆட்டத் தில் லிவர்பூல் சறுக்குமானால், செல்சியும் லிவர்பூல் அணியும் சம எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெறும் நிலை ஏற்படும்.
அதன்பின், லீக்கின் கடைசி ஆட்டம் எந்தக் குழு நான்காம் நிலையை எட்டும், அதன்மூலம் எந்தக் குழு சாம்பியன்ஸ் லீக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெறும் என்பது முடிவுசெய்யும். அப்படி ஒருகால் அடுத்த இரு ஆட்டங்களிலும் செல்சி வென்று, லிவர்பூல் பிரைட்டன் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் சறுக்குமா னால், இந்தப் பருவத்தில் செல்சி நிர்வாகியான கோன்டே அபாரமான சாதனையை நிகழ்த்தியவராவார்.

