பிரசல்ஸ்: போர்ச்சுகலுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் கால் கவட்டில் காயமடைந்ததால் மான்செஸ்டர் சிட்டி குழு வீரரும் பெல்ஜிய அணியின் தற்காப்பு ஆட்டக்காரருமான வின்சென்ட் கொம்பனி, 32, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே அவர் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும். இன்றைக்குள் அனைத்து நாடுகளும் 23 பேர் கொண்ட தங்களது இறுதி அணியை உறுதி செய்ய வேண்டும் என்பதால் பெல்ஜியம் கவலையில் ஆழ்ந்துள்ளது.
போர்ச்சுகல்=பெல்ஜியம் மோதிய நட்புமுறை ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. அந்த ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் காயமடைந்ததால் கொம்பனி திடலை விட்டே வெளியேற நேர்ந்தது. 'ஜி' பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம், தனது முதல் ஆட்டத்தில் 18ஆம் தேதி பனாமாவுடன் பொருதவுள்ளது.

