அறிமுக டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தான் படுதோல்வி

1 mins read

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அதன் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவிடம் நேற்று படுதோல்வி அடைந்தது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற இந்தத் தொடரில் மொத்தத்தில் ஒரு போட்டிதான் நடந்தது. இந்திய அணிக்கு ரகானே தலைவராக நியமிக்கப்பட்டார். பூவா தலையாவில் வென்ற இந்தியா முதலில் பந்தடித்தது. தவான் அதிரடியாக 96 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்தார்.

இதில் 19 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கும். முரளி விஜய் 105 ஓட்டங்களுக்கும் லோகேஷ் ராகுல் 54 ஓட்டங்களுக்கும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ரகானே, தினேஷ் கார்த்திக், புஜாரா அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். கடைசியில் வந்த பாண்டியா 71 ஓட்டங்கள் எடுத்தார். முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் பந்தடிப்பாளர்கள் எல்லோரும் வரிசையாக ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக முகம்மது நபி மட்டும் 24 ஓட்டங்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 109 ஓட்டங்களில் சுருண்டது. ஃபாலோ = ஆனில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.