கஸன்: ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் இருந்தபோது பால் போக்பா அடித்த கோலால் ஆஸ்திரேலியா 2-=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றி யுடன் தொடங்கி இருக்கிறது முன்னாள் வெற்றியாளரான பிரான்ஸ். 'சி' பிரிவில் இடம்பிடித்துள்ள பிரான்சும் ஆஸ்திரேலியாவும் கஸன் அரீனா விளையாட்டரங்கில் நேற்று மோதின. முற்பாதி கோலின்றி முடிய, 58வது நிமிடத்தில் அன்டோய்ன் கிரீஸ்மனின் பெனால்டி கோல் மூலம் பிரான்ஸ் முன்னிலைக்குச் சென்றது.
காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பத்தின் துணை யுடன் நடுவர் வழங்கிய அந்த பெனால்டி வாய்ப்பு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆயினும் பிரான்சின் மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை. 68வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஏரன் மூய் 'ஃபிரீ கிக்' மூலம் உதைத்த பந்தை பிரெஞ்சு ஆட்டக்காரர் சேமுவல் உம்டிட்டி கையால் தொட, இம்முறை ஆஸ்தி ரேலியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அவ்வாய்ப்பைத் தவற விடாது மிலே யெடினக் பந்தை வலைக்குள் உதைக்க, ஆட்டம் 1-1 எனச் சமநிலைக்கு வந்தது.
பிரான்ஸ் அணியின் வெற்றி கோலை அடித்ததால் சக வீரர் ஒலிவியர் ஜிரூவின் பாராட்டைப் பெறும் பால் போக்பா (நடுவில்). படம்: ஏஎஃப்பி

