சமாரா: உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் வென்று 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்தது தென்னமெரிக்க அணியான உருகுவே. போட்டிகளை ஏற்று நடத்தும் ரஷ்யாவை 3=0 என்ற கணக்கில் தோற்கடித்த உருகுவே, 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் சுற்றில் ஒரு கோலைக்கூட விட்டுத் தராத அணி எனும் பெருமையையும் பெற்றது. அந்த ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளின் முதல் சுற்றில் ஏழு கோல்களை அடித்த அர்ஜெண்டினா, எதிரணிகளை ஒரு கோல்கூட போடவிடாமல் தடுத்தது. அதேபோல, உருகுவே இம்முறை தனது முதல் இரண்டு ஆட்டங்களில் எகிப்து, சவூதி ஆகிய அணிகளை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது.
நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தின் 38வது நிமிடத்திலேயே ரஷ்ய வீரர் இகோர் ஸ்மோல்னிகோவ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று திடலைவிட்டு வெளியேறியது அவ்வணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. நட்சத்திர ஆட்டக்காரர் லூவிஸ் சுவாரெஸ் (படத்தில் வலது) 'ஃபிரீ கிக்' மூலம் அற்புதமாக கோலடித்து உருகுவே அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ரஷ்ய வீரர் செரிஷேவ் சொந்த கோல் அடித்து, உருகுவேயின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். உருகுவேயின் இன்னொரு முன்னணி வீரரான எடின்சன் கவானி, தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

