செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: பிரேசிலில் கடந்த முறை நடந்த உலகக் கிண்ணப் போட்டி களில் இறுதி வரை முன்னேறி நூலிழையில் கிண்ணத்தை இழந்த அர்ஜெண்டினா, இம்முறை முதல் சுற்றுடன் வெளியேறும் அபாயத்தில் இருந்தபோதும் ஒருவழியாக அதிலிருந்து தப்பியது. 'டி' பிரிவில் இடம்பெற்றிருந்த அந்த அணி முதல் இரு போட்டிகளிலும் சேர்த்து ஒரு புள்ளியை மட்டுமே பெற்றிருந்ததால் நேற்றைய ஆட்டத்தில் நைஜீரியாவை தோற்கடிக்க வேண்டிய இக்கட்டான நிலை யில் இருந்தது.
அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி 14வது நிமிடத்தில் அற்புதமாக கோலடித்து அர்ஜெண்டினாவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆயினும், பிற்பாதியின் ஆறாம் நிமிடத்தில் அனுபவ வீரர் மஸ்செரானோ தவறிழைக்க, நைஜீரியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. அதன்மூலம் சிரமமின்றி கோலடித்து ஆட்டத்தைச் சமன்படுத்தினார் நைஜீரியாவின் விக்டர் மோசஸ். அடுத்த 35 நிமிடங்களுக்கு ஆட்டம் அதே நிலையில் சென்றுகொண்டிருந்ததால் அர்ஜெண்டினாவின் அடுத்த சுற்றுக் கனவு பலிக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
அந்தத் தருணத்தில் அவ்வணியின் திடீர் நாயகனாக உருவெடுத்தார் தற்காப்பு ஆட்டக்காரர் மார்க்கோஸ் ரோஹோ. 86வது நிமிடத்தில் இன்னொரு தற்காப்பு வீரரான மெர்க்காடோ அனுப்பிய பந்தைத் துல்லிய மாகக் கணித்த அவர், அதை மிக நேர்த்தி யாக வலைக்குள் உதைத்து தமது அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதனால் நான்கு புள்ளிகளுடன் 'டி' பிரிவில் இரண்டாம் இடம்பிடித்து, காலிறு திக்கு முந்திய சுற்றுக்குள் அர்ஜெண்டினா நுழைந்தது. நாளை மறுநாள் இரவு பத்து மணிக்கு நடக்கவுள்ள ஆட்டத்தில் பிரான்ஸ் அணி யோடு அவ்வணி பொருதவுள்ளது.

