மாஸ்கோ: கடுமையான உழைப்பிற்குப் பிறகு உலகக் கிண்ணக் காற்பந்தின் இறுதிப் போட்டி வரை வந்துள்ளதால் கிண்ணம் வெல்லக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பைத் தாங்கள் வீணாக்க விரும்பவில்லை என்று பிரான்ஸ் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் ஒலிவியே ஜிரூ (படம்) தெரிவித்துள்ளார். நாளை இரவு மாஸ்கோ லுஸ்னிகி விளையாட்டரங்கில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் குரோவேஷியா உடன் பிரான்ஸ் பலப்பரிட்சை நடத்த இருக்கிறது. இந்த நிலையில், இப்போதைய பிரான்ஸ் அணியினர் மனஉறுதி யோடு, ஒருமித்த கவனம் செலுத்தி வருவதாகவும் இதுவே ஈராண்டு களுக்குமுன் யூரோ கிண்ண இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்தபோது இருந்த பிரான்ஸ் அணிக்கும் இப் போதைய அணிக்கும் வித்தியாசம் என்றும் ஜிரூ குறிப்பிட்டுள்ளார்.
'நாக் அவுட்' சுற்று ஆட்டங்களில் அர்ஜெண்டினா, உருகுவே, பெல் ஜியம் என பலம் பொருந்திய அணி களைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணியே கிண்ணத்தைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகப் பலரும் கருதுகின்றனர். அதற்கேற்ப, எப்பாடுபட்டேனும் இம்முறை கிண்ணத்தை வென்றாக வேண்டும் என்பதில் தாங்கள் உறுதி யாக இருப்பதாகக் கூறினார் ஜிரூ. "இப்போதைய நிலை வேறு. 2016 யூரோ கிண்ணத் தொடரில், ஜெர் மனியை அரையிறுதியில் வீழ்த்தி யதும் சற்று பரவசமடைந்துவிட் டோம். ஆனால், இம்முறை அரைஇறுதியில் பெல்ஜியத்துடன் மோதிய போது எங்களின் மனநிலை வேறாக இருந்தது," என்றார் இவர்.

