வெற்றி வேட்கையுடன் சுற்றிவரும் வேங்கைகள்

வெற்றி வேட்கையுடன் சுற்றிவரும் வேங்கைகள்

3 mins read

மாஸ்கோ: மொத்தம் 32 அணிகள் களமிறங்கிய உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கி இன்று 32வது நாள். இதுவே இந்த உலகக் கிண்ணத் தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யும் இறுதி நாள். வியூகம் வகுத்து அதைச் சரியாகச் செயற்படுத்தி ஈட்டிய வெற்றிகளும் எதிர்பாராத சில ஆச்சரிய முடிவுகளும் கிண்ணத்திற்காகப் போட்டியிடும் கடைசி இரு அணிகளைத் தீர்மானித்துவிட்டன. தொடரின் 64வது ஆட்டமாக இன்றிரவு நடக்க உள்ள இறுதிப் போட்டியில் கிண்ணத்திற்காக ஐரோப்பிய அணிகளான குரோவே‌ஷியாவும் பிரான்சும் மல்லுக்கட்டவிருக்கின்றன.

இருபது ஆண்டுகளுக்குமுன் சொந்த மண்ணில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் அணித்தலைவராக இருந்து, பிரான்சுக்கு முதன்முறையாகக் கிண்ணம் வென்று தந்த டிடியே டெசாம்ப்சுக்கு மீண்டும் ஒருமுறை அத்தகைய அரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இப்போதைய பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாள ரான டெசாம்ப்ஸ், இன்றும் தமது அணிக்கு வெற்றி கரமான வழியைக் காட்டி, கிண்ணத்தை வென்று தரும் பட்சத்தில் வரலாற்றில் இடம்பெறலாம். மாரியோ ஸகாலோ, பிரான்ஸ் பெக்கன்பவார் ஆகியோருக்குப் பின் அணித்தலைவராகவும் பயிற்றுவிப்பாளராகவும் கிண்ணம் வென்ற பெருமை அவரைச் சென்றடையும்.

இம்முறை போலவே, 1998 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஆச்சரியம் அளித்து அரையிறுதி வரை முன்னேறிய குரோவே‌ஷிய அணி, கடைசியில் பிரான்சிடம் சரணடைந்தது. தற்காப்பு வீரர் லிலியன் துராம் தமது அணிக்காக முதலும் கடைசியுமாக அடித்த இரு கோல்களால் 2=1 என பிரான்ஸ், குரோவே‌ஷியாவை வென்று இறுதிக்குள் நுழைந்தது. அதேபோல மீண்டும் ஒருமுறை குரோவே‌ஷியா வின் கிண்ணக் கனவை பிரான்ஸ் தடுத்து நிறுத் துமா, அல்லது இருபது ஆண்டுகளுக்குமுன் கிட்டிய தோல்விக்கு குரோவே‌ஷியா இன்று பழி தீர்க்குமா என்பதைக் காண காற்பந்து உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

இரு அணிகளுமே அற்புதமான சில ஆட்டக் காரர்களைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், பிரான்சே அதிகமான திறனாளர்களைக் கொண்ட அணி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 19 வயதே ஆனபோதும் இப்போதே உலகின் கவனத்தைத் தன்மீது விழச் செய்துள்ள கிலியன் இம்பாப்பே, உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழும் அன்டோய்ன் கிரீஸ்மன், எதிர்பாராத் தருணத்தில் எழுச்சி பெற்று அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒலிவியே ஜிரூ எனத் தாக்குதலில் எதிரணியை நிலைகுலைய வைக்கும் ஆட்டக் காரர்கள் பிரான்ஸ் அணியில் உள்ளனர்.

ஆனாலும், மாரியோ மண்ட்ஸுகிச், இவான் பெரிசிச் ஆகிய இருவரும் இணையும்போது குரோ வே‌ஷிய தாக்குதல் வரிசையும் பிரான்சுக்கு ஈடு கொடுக்கும்படியாக அபாயகரமானதாகத் திகழலாம். ரியால் மட்ரிட் குழுவிற்காக ஆடிவரும் லூக்கா மோட்ரிச், பார்சிலோனாவைப் பிரதிநிதிக்கும் இவான் ரகிட்டிச் -= இந்த இரு முன்னணி மத்திய திடல் ஆட்டக்காரர்களும் பிரான்சுக்குச் சிம்மசொப் பனமாக அமையலாம். இருந்தாலும், துடிப்பான கோன்டே, வலிமையான பால் போக்பா ஆகிய இருவராலும் குரோவே‌ஷிய இணையைச் சமாளிக்க முடியும். தற்காப்பைப் பார்க்கும்போது, குரோவே‌ஷியாவின் டோமகாய் விடா, டேயன் லோவ்ரன் ஆகியோரைக் காட்டிலும் சேமுவல் உம்டிட்டி, ரஃபாயல் வரன் ஆகியோர் அடங்கிய பிரெஞ்சு தற்காப்பு வரிசையே மேம்பட்டதாகக் காணப்படுகிறது.

அதனால், அவர் களை மீறி குரோவே‌ஷியா கோலடிப்பது என்பது குதிரைக்கொம்புதான். கோல்காப்பாளரைப் பொறுத்தமட்டில், இதற்கு முந்தைய ஆட்டங்களில் குரோவே‌ஷியாவின் டேனியல் சுபசிச் அற்புதமாகச் செயல்பட்டு சில கோல் முயற்சிகளை முறியடித்துள்ளார். ஆயினும், பிரான்சின் ஹியூகோ லோரிஸ் அவரைவிட திறமை சாலி என்பது பெரும்பாலானோரின் கருத்து. பயிற்றுவிப்பில் அதிக அனுபவமிக்க டெசாம்ப் சுக்கு இம்முறை எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்து வருகின்றன. இருந்தாலும், குரோவே‌ஷிய பயிற்று விப்பாளர் டாலிச்சும் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வியப்பளித்து வருகிறார். திறமையான வீரர்களைக் கொண்ட பிரான்ஸ் அணியே கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. இருந்தாலும், எழுச்சி பெற்ற அணியாகத் திகழ்ந்துவரும் குரோவே‌ஷியா, இன்றும் அதே உத்வேகத்துடன் ஆடி பிரான்சுக்கு அதிர்ச்சி அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.