பந்தடிப்பாளர்கள் மிளிரவேண்டியது அவசியம்: கங்குலி வலியுறுத்து

1 mins read
e572f87f-1b1b-42d8-81e3-ac7eea01f493
-

கோல்கத்தா: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்வது இந்தியப் பந்தடிப்பாளர்களின் கைகளில்தான் உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2=1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரை 1=2 என இழந்தது.

அடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்துப் பேசிய கங்குலி, "டெஸ்ட் போட்டிகளில் எதிரணிக்குக் கடும் போட்டியைத் தரவேண்டுமெனில் ஒவ்வோர் இன்னிங்சிலும் குறைந்தது 400 ஓட்டங்களை எடுக்கவேண்டும். அதிலும், இந்திய அணியினர் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை எடுத்துவிட்டால் அவர்கள் வெற்றி பெற்றுவிடுவர்," என்றார் கங்குலி.

இதற்கிடையே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டாலும் டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி அண்மைக்காலமாக ஓட்டம் குவிக்கத் தடுமாறி வருகிறார். அது பற்றி கங்குலியிடம் கேட்டதற்கு, "நிச்சயமாக அவர் விரைவில் தமது உச்ச ஆட்டத்திறனுக்குத் திரும்புவார்," என நம்பிக்கை தெரிவித்தார்.