கொழும்பு: டெஸ்ட் போட்டிகளில் தியூனிஸ் டி பிரைன் முதல் சதத்தை அடித்தபோதும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை அவரால் தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்த அணி, முதல் டெஸ்ட் போட்டியில் படு தோல்வி கண்டது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சைச் சமாளித்து ஓட்டம் குவிக்கத் தடுமாறியது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 338 ஓட்டங்களை எடுக்க, தென்னாப்பிரிக்க அணி 124 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களை எடுத்த நிலையில் இலங்கை அணி 'டிக்ளேர்' செய் தது. இதையடுத்து, 490 ஓட்டங் கள் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 199 ஓட்டங்களில் தோற்றது. தியூனிஸ் டி பிரைன் 101 ஓட்டங்களை எடுத்தார். இதையடுத்து, 2=0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது.

