இவ்வாண்டின் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற் பந்துப் போட்டியை ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட்டும் பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) குழுவும் நேற்று முன்தினம் முடித்து வைத்தன. இந்த ஆட்டம் தேசிய விளை யாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தைக் காண ஏறத்தாழ 22,000 ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஆட்டத் தில் கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 32வது நிமிடத் தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் அதன் முதல் கோலைப் போட்டு முன்னிலை வகித்தது.
அக்குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் வலை நோக்கி அனுப்பிய பந்து எதிரணி வீரர் மீது பட்டு சக வீரர் கிறிஸ்டஃபர் நுங்குவிடம் சென்றது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பந்தை வலைக்குள் சேர்த்தார் நுங்கு. இ டை வே ளை யி ன் போ து ஆட்டம் 1=0 எனும் கோல் கணக்கில் பிஎஸ்ஜிக்கு சாதகமாக இருந்தது. ஆட்டத்தின் அடுத்த கோலுக் காக ரசிகர்கள் 72வது நிமிடம் வரை காத்திருக்க வேண் டியிருந்தது. அட்லெட்டிகோ மட்ரிட்டின் தற்காப்பு ஆட்டக்காரர் செய்த பிழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பிஎஸ்ஜியின் இரண்டாவது கோலைப் போட்டார் மூசா டியாபி.
ஆனால் துவளாமல் ஆடிய அட்லெட்டிகோ அடுத்த மூன்று நிமிடங்களில் கோல் போட்டது. கார்னர் வாய்ப்பு மூலம் அனுப்பப்பட்ட பந்தைத் தலையால் முட்டி வலை நோக்கி அனுப்பினார் ரோபேட்டோ ஒலாபே. பந்தை பிஎஸ்ஜி கோல்காப்பாளர் தட்டி விட்டார். ஆனால் அவர் தட்டி விட்ட பந்து அட்லெட்டிகோவின் விக்டர் மொல்லேஜோவிடம் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் பந்து வலையைத் தீண்டியது. ஆட்டம் முடிய கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் எஞ்சியிருந்த போது அட்லெட்டிகோ ஆட்டத் தைச் சமன் செய்தது. இரண்டு கோல்கள் முன்னிலை வகித்தும் சாதக நிலையை இழந்த பிஎஸ்ஜி அதிர்ச்சியில் உறைந்தது. இருப்பினும், சரணடைய மறுத்த பிஎஸ்ஜி ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெற்றி கோலைப் போட்டது.
18 வயது போஸ்டோலாச்சி தூரத்திலிருந்து அனுப்பிய பந்து அட்லெட்டிகோ கோல்காப்பாள ரை மின்னல் வேகத்தில் கடந்து சென்று வலையைத் தொட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது.
பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவின் கிறிஸ்டஃபர் நுங்கு அனுப்பும் பந்து அட்லெட்டிகோ மட்ரிட்டின் கோல்காப்பாளரைக் கடந்து செல்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

