லண்டன்: சமூகக் கேடயத்தை மான்செஸ்டர் சிட்டி வென்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுவேரோ போட்ட இரண்டு கோல்கள் சிட்டியை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றது. சிறப்பாக விளையாடிய சிட்டி வீரர்கள் செல்சியை 2=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தினர். இதன் மூலம் செல்சியின் புதிய நிர்வாகியாக மௌரிசியோ சாரியின் பயணம் தோல்வியில் தொடங்கியுள்ளது. கடந்த பருவத்தில் வெளுத்துக் கட்டிய சிட்டி இந்தப் பருவத்திலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப் புடன் உள்ளது.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அகுவேரா போட்ட கோல் செல்சியை ஆட்டங்காண வைத் தது. இதுவே சிட்டிக்காக அகுவேரோ போட்ட 200வது கோல். இடைவேளையின்போது 1=0 எனும் கோல் கணக்கில் சிட்டி முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ ஐந்து நிமிடங்களில் கோல் போடும் வாய்ப்பைப் பெற்றார் அகுவேரா. பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு செல்சியின் கோல்காப்பாளரைக் கடந்து சென்ற அகுவேரோ, பந்தை வலை நோக்கி அனுப்பினார். ஆனால் பந்து இலக்கை அடையத் தவறியது. இதை அடுத்து, செல்சி கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் சிட்டியின் தற்காப்பு பிடிவாதமாக நிற்க, அக்குழுவால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில், ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் செல்சியின் கதையை முடித்து வைத்தார் அகுவேரோ.
செல்சி கோல்காப்பாளர் வில்லி கபல்லேரோவைக் கடந்து சென்ற சிட்டியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுவேரோ (இடது). அகுவேரோவின் கோல் முயற்சியைத் தடுக்க பாய்ந்த கபல்லேரோவுக்குக் கைமேல் பலன் கிட்டியது. இம்முறை அகுவேரோ அனுப்பிய பந்து வலைக்குள் செல்லவில்லை. நூலிழையில் இலக்கைத் தவறவிட்டார் அகுவேரோ. படம்: ஏஎஃப்பி

