லண்டன்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள மதுபானக்கூடத்துக்கு வெளியே நடந்த சண்டை தொடர்பான வழக்கில் அந்நாட்டின் கிரிக்கெட் நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்தக் கைகலப்பு நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பென் ஸ்டோக்ஸ் மறுத்ததை அடுத்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தில் ஆறு நாள் வழக்கு விசாரணை நடைபெற்றது. சம்பவம் நடந்தபோது ஸ்டோக்ஸ் குடிபோதையில் இருந்ததாகவும் கோபத்தின் உச்சத்தில் இருந்ததாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
ஆனால் ஒரே பாலினக் காதலர்கள் இருவரைச் சிலர் இழிவுபடுத்திப் பேசுவதைத் தடுக்க தாம் முயற்சி செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து திரு ரயன் அலி மற்றும் திரு ரயல் ஹேலிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்ததாகவும் ஸ்டோக்ஸ் நீதிமன்றத்தில் கூறினார். ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவரது மனைவி கிளேர் ரட்கிலிவ் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். திரு அலியும் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவருடன் ஸ்டோக்ஸ் கைகுலுக்கினார். இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட திரு ஹேலும் குற்றமற்றவர் என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்றம் செல்லும் பென் ஸ்டோக்ஸ், அவரது மனைவி கிளேர் ரட்கிலிவ். படம்: ராய்ட்டர்ஸ்

