நியோன்: 2024ஆம் ஆண்டு யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பை ஜெர்மனி பெற்று இருக்கிறது. இந்த வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதில் ஜெர்மனிக்கும் துருக்கிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆயினும், ஐரோப்பியக் காற்பந்துச் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ஜெர்மனிக்கு ஆதரவாக வாக்களித்தனர். கடைசியாக, 1988ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி யூரோ கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தி இருந்தது.
2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளிலும் யூரோ கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்தும் துருக்கிக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை. இம்முறையும் அந்த வாய்ப்பு கிட்டாததால் துருக்கி பெரிதும் ஏமாற்றமடைந்தது.

