$250,000 திரட்டிய சிறார்கள்

$250,000 திரட்டிய சிறார்கள்

1 mins read

இந்த ஆண்டில் சுமார் 670 பாலர்பள்ளிகளைச் சேர்ந்த 39,000 பேருக்கும் மேற்பட்ட சிறார்கள் சுமார் 1.2 மில்லியன் மணி நேரம் சமூக சேவைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உதவி தேவைப்படுவோருக்காக அவர்கள் $250,000 திரட்டி இருக்கிறார்கள். அதிபர் சவால் நிதியின் 'சிறிய தொடக்கம் பெரிய கனவு' என்ற ஓர் இயக்கத்தை ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் (ECDA) தொடங்கி இருக்கிறது.

அதில் அந்தச் சிறார்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள். இந்த இயக்கம் 2015ல் தொடங்கப்பட்டது. அது முதல் இந்த அளவுக்கு அதிக தொகை ரொக்கமாக இப்போதுதான் முதல்தடவையாக திரட்டப்பட்டு உள்ளது. திரட்டப்பட்டுள்ள நிதி, அதிபர் சவால் நிதி மூலம் பயன் அடைவோருக்கும் சமூக அமைப்புகளுக்கும் வழங்கப்படும். உணவுப்பொருட்கள், அன்றாட அத்தியாவசிய பொருட்கள், துணிமணிகள், காலணிகள் ஆகியவற்றையும் உதவி தேவைப்படுவோருக்காக சிறார்கள் திரட்டினார்கள்.

இவை ஏழை நாடுகளில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படுவோருக்கும் வழங்கப்படும். சன்டெக் சிட்டியில் நேற்று நடந்த இந்த வாரியத்தின் மாநாட்டில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டார். சிறிய தொடக்கம் பெரிய கனவு இயக்கம் தொடர்ந்து சிங்கப்பூரர்களிடையே கருணையையும் பெருந்தன்மையையும் பேணி வளர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.